பிரதமர் மோடி விரக்தி காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்: ஜெய்ராம் ரமேஷ்

அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பிரதமர் மோடியும் விரக்தி மற்றும் நம்பிக்கையின்மை காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தல் தொடர்பாக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பிரதமர், “காங்கிரஸுக்கு வாக்களித்த மக்கள், அக்கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இனி வாக்குறுதிகள் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. காங்கிரஸ் என்றாலே ஊழல் மற்றும் பொய்யான வாக்குறுதி என்று அர்த்தம். இனி காங்கிரஸ் கட்சி என்ன வாக்குறுதிகளை வழங்கும். அதன் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமரின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ் தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகள் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

அமித் ஷா, யோகிக்கு பின்னர், விரக்தி மற்றும் நம்பிக்கையின்மையின் காரணமாக தரக்குறைவான கருத்துகளை வெளியிடுவதில் இது பிரதமர் மோடியின் முறை. மே 10-ம் தேதி கர்நாடகா மக்கள் 40 சதவீத கமிஷன் அரசுக்கு உறுதியாக முடிவு கட்டுவார்கள். அதற்கு அடுத்த சில நாட்களில் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றியது போல, கர்நாடகாவிலும் நிறைவேற்றும்.
ராஸ்தானில் காங்கிரஸ் அரசு, பழைய பென்ஷன் திட்டத்தினை அமல், 125 வேலை உறுதி, தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச அவசரகால சிகிச்சை, சிரஞ்சீவி யோஜனா மூலம், தனியார் மருத்துவமனைகளில் ரூ.25 லட்சம் காப்பீடு மற்றும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

சத்தீஸ்கரில் காங்கிரஸ் அரசு, 17.87 லட்சம் விவசாயிகளின் ரூ.9270 கோடி கடன் தள்ளுபடி, நெல் விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை, ராஜீவ் காந்தி கிஸான் நியாய் யோஜனா மூலமாக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.9,000 மானியம், பழைய பென்ஷன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் பழைய பென்ஷன் திட்டம், பெண்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை, இத்திட்டத்தின் முதல் பகுதியில் 2.5 லட்சம் பெண்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2019-ல் ‘ஆப்ரேஷன் கமலா’ மூலமாக திருட்டுத்தனமாக பாஜக ஆட்சியை பறிப்பதற்கு முன்பு, 2013 – 2018 வரை கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு நிலையான ஆட்சியை வழங்கி 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. 261 வாரங்களில் 261 வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவைகளை காங்கிரஸ் உறுதியாக செயல்படுத்தும். இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.