என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா: ரஜினிகாந்துக்கு உற்சாக வரவேற்பு!

என்.டி. ராமாராவ் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொள்ள விஜயவாடா சென்ற நடிகர் ரஜினிகாந்துக்கு, நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மறைந்த நடிகர் என்.டி. ராமாராவின் நூற்றாண்டு விழா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் பிரம்மாண்டாமாக கொண்டாட திட்டமிடப்பட்டது. அதன்படி, அதன் தொடக்க விழா இன்று மாலை விஜயவாடாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து திரைத்துறை, அரசியல், மற்றும் தொழில்துறை பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு, ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் விஜயவாடாவிற்கு புறப்பட்டுச் சென்றார். கன்னாவரம் விமான நிலையம் சென்ற அவருக்கு நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் விழாக்குழுவினர் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது நடிகர் பாலகிருஷ்ணாவை நடிகர் ரஜினிகாந்த் கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

பின்னர் அங்கிருந்து காரில் சென்ற ரஜினிகாந்த் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஓய்வெடுத்தார். மாலை 3 மணியளவில் ரஜினிகாந்த் உண்டவல்லியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நடக்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர், சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோரின் குடும்பத்தினருடன் நடிகர் ரஜினிகாந்த் என்.டி.ராமாராவின் நூற்றாண்டு விழா அரங்கிற்கு செல்கின்றார்.

மாலை நடைபெற உள்ள தொடக்க விழாவில் என்டிஆர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரை குறித்த ஒரு புத்தகமும், பிரச்சாரத்தின் போது மக்களை நேரடியாக சந்தித்து ஆற்றிய பிரச்சார உரைகள் மற்றொரு புத்தகம் என்.டி.ராமாராவ் குறித்த 2 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளது.