பாஜக வித்தியாசமான கட்சி, திமுக ஊழல் கட்சி: வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம் என்று கட்சியை தொடங்கி திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன் வெறும் நட்சத்திர பேச்சாளர் மட்டும்தான் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் 2021 சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த நிலையில் அவரது கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இந்த நீர் மோர் பந்தல் தொடக்க விழாவில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது:-

பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நீர் மோர் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஒன்றை வழங்கினார். ஆனால், தினம்தோறும் தமிழ்நாட்டில் பட்டப்பகலில் படுகொலைகள் நடந்துகொண்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப்போகிறோம், மாற்றத்தை கொண்டு வர உள்ளோம் என்று சொல்லிதான் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழ்நாட்டில் தொடங்கினார். ஆனால், காங்கிரஸ் கட்சியைபோல் மக்கள் நீதி மய்யம் நீதி கட்சி ஊழல் கட்சியுடன் சேர்ந்து திமுகவுடன் இணைந்து கொண்டு மாற்றத்தை கொடுக்க உள்ளேன் என்றால் உங்களுடைய அரசியல் கணக்கு என்ன. கமல்ஹாசனை கட்சித் தலைவராக பார்க்க முடியாது. அவர் ஊழல் கரை படிந்த காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைய நட்சத்திர பேச்சாளார். அவர்களின் இன்றையை நிலை இதுதான். ஒவ்வொரு துறை சார்ந்தவர்களையும் தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்து வருவதைபோன்று அவரையும் அழைத்து வந்து பிரச்சாரம் செய்துகொள்ளலாம்.

கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் நாளுக்கு நாள் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருகிறது. ஒரு சிலர் கட்சியில் இருந்து வெளியில் சென்ற காரணத்தால் பாஜகவிற்கு பின்னடைவு ஏற்படும் என சில ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். களத்தில் நிலை இதுவல்ல. பாஜக வித்தியாசமான கட்சி. கட்சியை விட்டு எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாஜக தொண்டர்கள் அவர்களை பின்பற்றி செல்லப்போவது கிடையாது. இது தலைவர்களை பின்பற்றும் அரசியல் கட்சி கிடையாது. எனவேதான் தொண்டர்கள் கட்சியிலேயே உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.