காங்கிரஸ் ஆட்சியில் வந்த, ‘மிசா’வுக்கும், இப்போது நடக்கும் வருமான வரி சோதனைகளுக்கும் வித்தியாசம் இல்லை என, அமைச்சர் உதயநிதி கூறினார்.
திருச்சி மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாளையொட்டி “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கப்பட்டது. புகைப்பட கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த புகைப்பட கண்காட்சியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது. உழைப்பு என்றால் ஸ்டாலின் என கருணாநிதி கூறியுள்ளார். அதனை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது. சட்டமன்றத்தில் விளையாட்டுத்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளுக்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும். ஏற்கனவே சில பணிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு அறிவிப்பாக கண்டிப்பாக நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். மிசாவிற்கும், தற்போது நடைபெறும் பாஜகவின் வருமான வரி சோதனைக்கும், எந்த வித்தியாசமும் இல்லை. எந்த சவாலையும் சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.மிசாவும், தற்போதைய ஐ.டி ரெய்டும் ஒன்றுதான் என உதயநிதி கூறியதையடுத்து, பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்பதைத்தான் மறைமுகமாகச் சொல்கிறீர்களா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வியால் புருவம் உயர்த்தி யோசித்த உதயநிதி ஸ்டாலின், “நாங்க ஏன் பாஜகவுடன் கூட்டணி வைக்கணும்? பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது பத்திரிகையாளர்களாகிய நீங்கதான்.. நாங்க கிடையாது” என சிரித்தபடியே கூறினார். ஆனால், அருகில் இருந்த அமைச்சர் கே.என்.நேரு டென்ஷன் ஆகி, “யாரு நீங்க.. என்னா தம்பி.. என்ன கேள்வி கேட்குற.. கேள்விய கரெக்டா கேளுய்யா.. இதுமாதிரி எல்லாம் பேசாம நல்ல கேள்வியா கேளுய்யா..” எனச் சீறினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், “சரி.. பரவால்லணே.. பரவால்லணே..” என கூல் செய்தார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகும் நிலையில் உங்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறதே உண்மையா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு உதயநிதி ஸ்டாலின், யார் சொன்னது? யார் தகவல் கொடுத்தது எனக் கேட்டார். அதற்கு அந்த செய்தியாளர் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறதே எனக் கூற, “நீங்க தாங்க சமூக வலைதளம்” எனச் சிரித்தபடியே கூறிவிட்டுக் கிளம்பினார்.