திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்துக்கு தயார்: அன்புமணி

திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்குமானது என்று அன்புமணி கூறியுள்ளார்.

உத்திரமேரூரில் பா.ம.க. 2.0 விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி. பேசியதாவது:-

பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், விவசாயிகளுக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் தமிழ்நாட்டில், திராவிட ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட ஆட்சி என்று சொன்னால், 55 ஆண்டுகள் கடந்தும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் தமிழ் நாட்டை ஆட்சி செய்து வருகிறது. மக்கள் மாற்றம் வேண்டும் என நினைக்கின்றார்கள். நான் நீண்ட காலமாகவே விவாதத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறேன். திராவிட மாடல்-பாட்டாளி மாடல் விவாதத்திற்கு நான் தயார். திராவிட மாடல் என்பது முதலாளித்துவம், பாட்டாளி மாடல் என்பது விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்குமானது.

நடந்து முடிந்த சட்ட மன்ற கூட்டத் தொடரில் முதலாளித்துவத்திற்காக ஒரு சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. 100 ஏக்கருக்கு மேல் தொழிற்சாலை வைத்திருப்பவர்களுக்கு, நீர் நிலைகள் ஒரு பொருட்டல்ல என்ற சிறப்பு அதிகாரத்தை இந்த சட்டம் வழங்குகிறது. சாதாரண மக்கள் நீர் நிலையில் ஒரு வீடு கட்ட கூடாது. ஆனால் தொழிற்சாலை அந்த இடத்தில் கட்டலாம். இந்த சட்டம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. உடனடியாக தி.மு.க. அரசு இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மக்களுக்கு இது குறித்து எல்லாம் தெரிவது கிடையாது. ‘கிரிக்கெட்’, ‘கிரிக்கெட்’ அதே தான் பார்க்கிறார்கள். அதை பார்ப்பது தப்பு கிடையாது. ஆனால் கிரிக்கெட் வாழ்க்கை கிடையாது. நானும் சி.எஸ்.கே. ஆதரவாளன் தான். டோனிக்கு விசில் போடு. ஆனால் அந்த அணியில் ஒரு தமிழர்கள் கூட இல்லாமல் இருப்பது நிச்சயம் வருத்தம்தான். இவ்வாறு அவர் பேசினார்.