அரசியலில் அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நானே பேசக்கூடாது. ஆனால் பத்தாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக என்னை பற்றி அவர் பேசியிருக்கிறார். மான, ரோஷம் இருந்தால், உண்மையான ஐ.பி.எஸ்ஸாக இருந்திருந்தால் அண்ணாமலை நேராக நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும் என்று திமுக எமபி டி.ஆர்.பாலு சவால் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் திமுக சார்பில், காவிரி டெல்டா பகுதியில் ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்க ஏலத்தை தடுத்து நிறுத்தி, விவசாயிகளை காப்பாற்றிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு தஞ்சாவூரில் நடந்தது. இதில் தி.மு.க பொருளாளரும், பாராளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு பேசியதாவது:-
என் மானத்துக்கு சவாலாக யாராவது பேசி என் காலைத் தொட்டால் அவர் தலையை மிதிக்காமல் விடமாட்டேன் இது என்னுடைய குணம். பா.ஜ.க தலைமை நிர்வாகத்திலிருந்து கட்சியை விட்டு சென்ற ஒருவர் அண்ணாமலையை பற்றி பேசும் போது, 420 மலை, மோசடி மலை என்கிறார். வழக்கிலிருந்து ஒருவரை விடுதலை செய்வதற்காக ரபேல் வாட்ச் வாங்கியதாக பாஜகவில் இருந்து விலகிய மற்றொருவர் சொல்கிறார். இதெல்லாம் ரெக்கார்டில் இருக்கிறது. அரசியல் அறிவே இல்லாத, அட்ரஸ் இல்லாத ஒரு சாதாரண அண்ணாமலையை பற்றி நாம் பேசுவது சரியில்லை. நானே பேசக்கூடாது. ஆனால் பத்தாயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக என்னை பற்றி அவர் பேசி உள்ளார். மான, ரோஷம் இருந்தால், உண்மையான ஐ.பி.எஸ் அதிகரியாக இருந்திருந்தால் அண்ணாமலை நேராக நீதிமன்றத்திற்கு சென்றிருக்க வேண்டும். அண்ணாமலை சொன்னதுமே நான் அவருக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டேன். இது வரை அவர் நீதிமன்றத்திற்கு செல்லவில்லை. என் மீது வழக்கும் தொடரவில்லை. ஆனால் என்னை பற்றி அவதூறாக பேசியதற்காக வரும் மே 8ம் தேதி சைத்தாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடரப்போகிறேன். அதன் பிறகு ரூ.100 கோடி கேட்டு மான நஷ்ட சிவில் வழக்கு தொடரப்போகிறேன்.
அண்ணாமலை பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ளாதீர்கள். அரசியலில் நாகரீகம் என்பது முன்பு இருந்தது. இப்போது நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் எல்லாம் அரசியலில் இருக்கிறார்கள். பாஜகவில் சேருபவர்கள் எல்லாம் போலீஸாரால் தேடப்படுவர்களாக இருக்கிறார்கள். போலீஸூக்கு பயந்தவர்களை, தப்பு செய்கின்ற தனக்கு வேண்டிய நபர்களை அண்ணாமலை கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கிறார். எதற்காக தவறான நபர்களை சேர்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
திமுக தலைவரின் பெயரையும், புகழையும் கெடுக்க இங்கே ஒரு சதி நடக்கிறது. இங்குள்ள திமுக தொண்டர்கள் ஒவ்வொருவரும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். திமுக என்பது எஃகு கோட்டை. கோட்டையை பார்த்து விமர்சனம் செய்தால் நாங்கள் ஒன்றும் சொல்ல மாட்டோம். ஆனால் கோட்டையில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தால், எங்களை தொட்டுப்பார்க்க நினைத்தால் என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது. திமுகவை அசைத்து பார்க்கவோ,தொட்டுப்பார்க்கவோ எந்த கொம்பனாலும் முடியாது. நாங்கள் எமர்ஜென்சி, மிசாவெல்லாம் பார்த்தவர்கள். ரெளடிகளை வைத்து கொண்டு திமுகவை தேர்தலில் தொட்டுப்பார்க்கலாம் என நினைக்கிறார். உங்களை எப்படி சந்திப்பது என்று திட்டம் போட்டு விட்டோம். நீங்கள் செய்கின்ற தகிடுதத்தம் தமிழ்நாட்டில் எடுபடாது. உங்களை நீங்கள் காப்பாற்றி கொள்ளுங்கள் இல்லையென்றால் கையும் களவுமாக மாட்டுவீர்கள். இதை நான் எச்சரிக்கையாவே சொல்கிறேன். இவ்வாறு டிஆர் பாலு கூறினார்.