ரஷ்ய அதிபர் மாளிகை மீது டிரோன் தாக்குதல்!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் மாளிகையில் திடீரென டிரோன் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என குற்றம் சாட்டியது.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இந்நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளினைக் குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் மாளிகை மீது 2 டிரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. அந்த 2 டிரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அதிபர் மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. டிரோன் தாக்குதல் முயற்சி நடந்த சமயத்தில் புதின் அதிபர் மாளிகையில் இல்லை. அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா, இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது

இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ரஷ்ய அதிபர் மாளிகையில் உள்ள கோட்டையில் வெள்ளை நிற புகை வருவதும் தெளிவாகத் தெரிகிறது. அதேபோல மற்றொரு வீடியோவில் அதிபர் மாளிகைக்கு மேலே வரும் டிரோனை ரஷ்யா சுட்டு வீழ்த்துவதும் பதிவாகியுள்ளது.

இதற்கிடையே ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இனி அங்கீகரிக்கப்படாத டிரோன்கள பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாஸ்கோ மேயர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அரசு அதிகாரிகளிடமிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டும். அனுமதி இல்லாத விமானங்கள் பறக்கத் தடை வித்துள்ளோம். அங்கீகரிக்கப்படாத ட்ரோன் நடமாட்டத்தைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த டிரோன் தாக்குதல் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள போதிலும், மே 9ஆம் தேதி நடக்கும் அந்நாட்டு ராணுவத்தின் வெற்றி பேரணி திட்டமிட்டது போல நடக்கும் என்று ரஷ்யா கூறியுள்ளது. சுமார் 27 மில்லியன் உயிர்களைப் பலி கொடுத்து சோவியத் யூனியன் ஹிட்லரின் நாஜிக்களை விரட்டியடித்த தியாகத்தை மக்களிடையே விளக்கும் நிகழ்வுதான் இந்த வெற்றி பேரணியாகும். உக்ரைனிடம் இருந்து பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வந்த போதிலும், திட்டமிட்டபடி பேரணியை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவே ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. ரஷ்யா இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறும் போதிலும் உக்ரைன் இது குறித்து எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை.