இந்திய பெருங்கடலில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இந்தியா-மாலத்தீவு வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த திங்கள்கிழமை மாலத்தீவுக்கு 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் அந்நாட்டு அதிபர் இப்ராகிம் சோலி மற்றும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா தீதி ஆகியோரை சந்தித்து பேசினார். 2-வது நாளான நேற்றுமுன்தினம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹுராவீ என்ற பெயரிடப்பட்ட விரைவு ரோந்து கப்பல் அந்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலோர மற்றும் கடற்கரையில் இருந்து சற்று உட்பகுதியில் அமைந்த இடங்களுக்கு அதிவிரைவாக சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள இது உதவும்.
இதே போன்று போர் வீரர்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற எல்சிஏ ரக கப்பல் ஒன்று என இரண்டு கப்பல்கள் மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய நிதியுதவியுடன் கட்டப்படும் ஏகதா துறைமுகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ராஜ்நாத் சிங், மரியா தீதி ஆகியோர் பங்கேற்றனர். மாலத்தீவு அமைச்சருடன் அமைச்சர் ராஜ்நாத், ராணுவ ஒத்துழைப்பு, இருவருக்கும் பொதுவான சர்வதேச பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினார்.
பின்னர் இருநாடுகள் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தை இரு அமைச்சர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இருநாடுகளுக்கும் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அங்கீகரித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.