களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கைதான் என்பதை நாங்கள் அறிவோம், ஆளுநரின் கோபத்தை ரசிக்கிறேன் என்று எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் சூழலில் திமுக அரசின் திராவிட மாடல் கொள்கையை கடுமையாகச் சாடியுள்ளார் ஆளுநர் ரவி. ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான ஒரு கொள்கையை உயிர்ப்புடன் வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி” எனத் தெரிவித்துள்ளார். ஆளுநரின் இந்தக் கருத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆளுநர் ரவியின் கருத்துகளுக்கு பதில் கொடுத்துள்ளார். சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
“திராவிட மாடல் செத்துப் போன தத்துவம்.
மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது.
பரிணாமக்கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்
என்று சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் அவர்களே!
களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம்.
உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
