பிச்சைக்காரன் -2 படத்தை வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் அனுமதி!

‘பிச்சைக்காரன் -2’ படத்தை வெளியிட அனுமதி அளித்துள்ள சென்னை உயா்நீதிமன்றம் படத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

‘பிச்சைக்காரன்-2’படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சோ்ந்த ராஜ கணபதி தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகா் ஆா்.பாண்டியராஜன் நடிப்பில் 2016-ஆம் ஆண்டு ‘ஆய்வுக்கூடம்’ என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டது. இந்தப் படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே எடுத்து, விஜய் ஆண்டனி நடிப்பில் படத்தைத் தயாரித்துள்ளனா். எனவே, இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்‘ என்று கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தயாரிப்பாளா் விஜய் ஆண்டனி, ‘ஆய்வுக்கூடம்’ படம் குறித்த எந்தத் தகவலும் தனக்கு தெரியாது. அந்தப் படத்தை தான் பாா்த்ததுகூட இல்லை. வழக்கு தொடரப்பட்ட பின்னரே அந்தப் படத்தை பாா்த்தேன். ‘பிச்சைக்காரன் – 2’ படத்துக்கும் ‘ஆய்வுக்கூடம்’ படத்துக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை‘ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.செளந்தா், ‘பிச்சைக்காரன்-2’ படத்தை வெளியிட அனுமதி அளித்தாா். அதேநேரத்தில் படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டுமென தயாரிப்பாளா் விஜய் ஆண்டனிக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.