பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்.
“கோவில் மாநகர்” என்ற பெருமைக்குரிய மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த விழாக்களில் சித்திரை திருவிழா வரலாற்று சிறப்பும், உலக பிரசித்தியும் பெற்றதாகும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந்தேதி காலை வெகுவிமரிசையாக நடந்தது. தொடர்ந்து 3-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடைபெற்றது. தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர். தேர்கள் நிலைக்கு வந்த பிறகு, அன்றைய தினம் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் ஒரே சப்பரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இந்த ஒரு நாளில் மட்டும்தான். எனவே இதை பக்தர்கள் குடும்பம்-குடும்பமாக கண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே மதுரை அழகர்கோவிலில் சித்திரைத்திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்துவருகிறது. இதில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சிகர நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம் மாலை 5.50 மணிக்கு கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மாலை 6 மணி அளவில் அங்குள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார். அப்போது நூபுர கங்கை தீர்த்த அபிஷேகம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 6.50 மணி அளவில் கண்டாங்கி பட்டு உடுத்தி, நெற்றி பட்டை, கரங்களில் வளைதடி, நேரிக்கம்பு, பரிவாரத்துடன் மேள, தாளம் முழங்க கள்ளழகர் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். நேற்று(4-ந்தேதி) மூன்று மாவடியில், மதுரை மக்கள் அழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவை நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகர், இரவில் தல்லாகுளம் பெருமாள் கோவிலை அடைந்தார். விடிய, விடிய அழகருக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.
காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் இறங்கினார். ஆழ்வார்புரம், வடகரை பகுதியில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் பவணி வந்தார். கோவிந்தா.. கோவிந்தா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வணங்கினர்.பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர். வெள்ளிக்குதிரையில் வீரராகப்பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.
வைகை ஆற்றங்கரை ஓரத்திலேயே குதிரை வாகனத்தில் வண்டியூருக்கு கள்ளழகர் செல்கிறார். மே 6ஆம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். மே 6ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். அழகர் மதுரைக்கு வந்த நோக்கம் நிறைவேறியதும் அன்றைய தினம் நள்ளிரவு இராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மே 7ஆம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் அழகர். அன்று பிற்பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லாக்கில் புறப்படுவார். இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் தங்கும் கள்ளழகர் மே 8ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். அப்போது பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை நேரத்திலும் வந்து வழியனுப்பி வைப்பார்கள். மே 9ம் தேதி காலையில் கள்ளழகர் அழகர் கோயிலுக்கு வந்தடைகிறார்.
முன்னதாக கள்ளழகரை ராமர் பாதம் தாங்கிகள் முன்னே வர சர்க்கரை தீபம் ஏற்றி பெண்கள் வரவேற்றனர். மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி வைகையில் எழுந்தருளும் நிகழ்வு விமர்சையாக நடைபெற்றது. அழகர் கோயிலில் இருந்து கள்ளழகர் புறப்பாடாகி மதுரை வந்து சேர்ந்து வைகை ஆற்றில் இறங்குவதே ஐதீகம்.புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளனர். அதனால் மதுரை மாநகரம் விழாக்கோலத்துடன் உள்ளது.
