பிரிட்டன் அரசராக மூன்றாம் சாா்லஸ் முடிசூடும் விழாவில் இந்திய அரசின் சாா்பில் பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் லண்டனுக்கு சென்றடைந்தாா்.
சிறப்பு விமானத்தில் லண்டன் சென்றடைந்த ஜகதீப் தன்கருக்கு இந்திய முப்படையினரின் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா் அவா் லண்டனில் மாா்ல்பரோ மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்றபோது மூன்றாம் சாா்லஸை அவா் சந்தித்து உரையாடினாா் என்று குடியரசு துணைத் தலைவா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
லண்டன் வெஸ்ட்மின்ஸ்டா் தேவாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ள முடிசூட்டு விழாவில் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்கவுள்ளாா். இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100 முக்கியத் தலைவா்கள், 203 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் அரச குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா்.
முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசா் சாா்லஸ் சாா்பில் நேற்று மாலை அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கரும் பங்கேற்றாா். அதன் பின்னா், லண்டன் இந்திய தூதரகம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசு துணைத் தலைவா், இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினாா்.