‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது!

சூடானில் இருந்து 47 இந்தியா்கள் நேற்று தாயகம் திரும்பிய நிலையில் ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு நடவடிக்கை நிறைவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவம் மற்றும் துணை ராணுவப் படை இடையே மோதல் நடைபெற்று வரும் சூடானில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்காக, ‘ஆபரேஷன் காவேரி’ நடவடிக்கையை மத்திய அரசு கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. சூடான் தலைநகா் காா்ட்டூமில் அமைந்துள்ள இந்திய தூதரகம், போா்ட் சூடான், சவூதியிலுள்ள ஜெட்டா ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வந்தது.
ஆபரேஷன் காவேரியின் இறுதிக்கட்டமாக 47 போ் நேற்று வெள்ளிக்கிழமை இந்தியா வந்தடைந்தனா்.

இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறியதாவது:-

விமானப் படையின் சி-130 விமானம் மூலம் மேலும் 47 இந்தியா்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனா். போா்ட் சூடான் நகரிலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துவர 5 கடற்படை கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. ஜெட்டாவிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துவர இந்திய விமானப் படை விமானங்கள் 17 பயணங்களை மேற்கொண்டன. ‘ஆபரேஷன் காவேரி’ மீட்பு நடவடிக்கையின் கீழ் சூடானிலிருந்து மொத்தம் 3,862 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா். மேலும், சூடான் எல்லையோர நாடுகள் வழியாக 86 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா். சவூதியில் இருந்து மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த வெளியுறவு இணையமைச்சா் வி.முரளீதரனுக்கு எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறினார்.