சீமானின் போராட்டம் கோமாளித்தனமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
கேரளாவில் 32 ஆயிரம் இந்து பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு சென்றுள்ளதாக நிருபிக்கப்படாத தகவல்களின் அடிப்படியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சார படம் எனவும், அந்த படத்தை தமிழகத்தில் வெளியிட கூடாது எனவும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது என ஏற்கனவே திமுக அரசை சீமான் எச்சரித்து இருந்தார். ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் திரையிட திமுக அரசு அனுமதி அளித்தால் போராட்டம் நடத்துவோம் என அறிக்கை வெளியிட்டு எச்சரித்தார்.
இருப்பினும் உளவுத்துறையின் எச்சரிக்கையையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் 24 திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி படம் நேற்று வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திரையரங்குகள் முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி இறங்கியது. சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் வணிகவளாகத்தின் பி.வி.ஆர் திரையரங்கம் முன்பு, சீமான் தலைமையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் சீமானின் போராட்டம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது டுவிட்டர் பதிவில், ‘‘கேரள ஸ்டோரி திரைப்படத்தை எதிர்த்து திரையரங்கத்தின் முன் ஒரு கோமாளித்தனமான போராட்டத்தை நடத்தி் இருக்கிறது அட்டகத்தி சீமான் கும்பல். திரைப்படத்தை எடுத்த RSS கும்பல் குறித்தோ, படத்தை ஆதரித்து வெளிப்படையாக கருத்து சொன்ன மோடி குறித்தோ எந்த கண்டனமும் எதிர்ப்பும் செய்யவில்லை. மாறாக, தமிழ்நாடு அரசையும் திராவிட அரசையும் கண்டிப்பதற்கான வாய்ப்பாகத்தான் இதை பயன்படுத்தி உள்ளார் அண்ணன் சீமான். அதாவது,பாஜக கும்பலுக்கு எதிரான எதிர்ப்பை திமுக அரசு பக்கம் திசை திருப்ப முயற்சித்துள்ளார். இதற்கு பெயர்தான் சங்கித்தனம். மோடி குறித்த தீவிரவாத முகத்தை அம்பலப்படுத்திய பிபிசி ஆவணப்படத்தை தடை செய்த பாஜக கும்பலுக்கு எதிராக ஒரு போராட்டத்தைக்கூட முன்னெடுக்க அஞ்சுகிற கட்சி தான் ஓம்தமிழர் கட்சியா?’’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.