சர்ச்சைக்கு நடுவே கடந்த 5ம் தேதி வெளியான ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ்நாட்டில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி திரைப்பட இயக்குனராக இருப்பவர் சுதிப்தோ சென். இவர் இயக்கிய படம் தான் ‛தி கேரளா ஸ்டோரி’. இந்த படத்தின் டீசர் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் வெளிநாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டு கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைக்கப்படுவதாக கூறப்பட்டதால் சர்ச்சை கிளம்பியது. இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் குரல் கொடுத்து வந்தனர். மேலும் கேரளா உயர்நீதிமன்றத்திலும் தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இதையடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி ரிலீசானது.
இதையடுத்து கேரளாவில் திரையரங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மேலும் திரையிடப்பட்டால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது. இதையடுத்து இதற்கிடையே தான் டிஜிபி சைலேந்திர பாபு திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து ‛தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டன. இருப்பினும் கூட நாம் தமிழர் கட்சி நேற்று ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதேபோல் பிற அமைப்புகளும், கட்சிகளும் போராட்டங்களை நடத்தியது.
இந்நிலையில் தான் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.