தி கேரளா ஸ்டோரி படத்தை நான் பார்க்கலாம் என்று இருக்கிறேன். தி கேரளா ஸ்டோரி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுவை மற்றும் தெலுங்கானா மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்வராக மு.க ஸ்டாலின் ஆட்சி இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அண்ணன் ஸ்டாலினுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதுவையில் அண்ணன் ரங்கசாமியும் இன்றுதான் பதவியேற்றார். அவருக்கு வாழ்த்துக்கள். நேற்றில் இருந்து இரண்டு ஆண்டு சாதனைகள் வந்து கொண்டு இருக்கிறது. ஒரே ஒரு எளிய கேள்வி.. இரண்டு ஆண்டு சாதனைகளை பற்றி பேசும் போது ஜாதி, மதம் பிரித்து பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் ஸ்டாலினின் அறிக்கை..
எப்படி பிரித்து பார்ப்பதனால் நீங்கள் இந்துக்களுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள். நான் ஒரு இந்துவாக தமிழகத்தில் பிறந்த தனி நபரக இதை கேட்கிறேன். ஜாதி மதம் பிரித்து பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது. எப்படி பிரித்து பார்ப்பதால், எதை வைத்து பிரித்து பார்ப்பதால் நீங்கள் விநாயகர் சதுர்த்திக்கும் தீபாவளிக்கும் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள்.. இது ஒரு கேள்வி.. ஏனெனில், பிரதமர் எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறார். ஆளுநர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள். எந்த விதத்திலும் பிரித்து பார்ப்பது கிடையாது. அமைச்சர்கள் கொடுத்த அனைத்து விளம்பரங்களிலும் உதயநிதி இருக்கிறார். இரண்டு ஆண்டு சாதனையில் வாரிசு உருவானது இன்னொரு சாதனை. அறிவிப்புகளை திரும்ப பெறும் ஆட்சியாக இந்த ஆட்சி இருந்து கொண்டு இருக்கிறது.
தி கேரளா ஸ்டோரி படத்தை நான் பார்க்கலாம் என்று இருக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிராக இந்த படம் சித்தரிக்கப்படுகிறது. யார் அதற்கு ஆதரவானவர்கள் என்று நினைக்கிறார்களோ.. அவர்கள் தங்களுக்கு எதிரானது என்று நினைப்பார்கள். தீவிரவாதத்திற்கு எதிரானது என்று எதிர்த்தால் நமக்கு ஆதரவானது என்று நினைப்பார்கள்..அது அவரவர்களின் மன நிலையை பொறுத்தது. பிரதமர் மோடி சொன்னது போல தீவிரவாதத்தில் எந்த ரூபத்தில் வந்தாலும் அது ஒத்துக்கொள்ள முடியாது ஒன்று.
பெண்களையும் இளைஞர்களையும் பாதிக்கும் வகையில் இருந்தால் அதன் உண்மைத்தன்மை தெரிந்து இருக்க வேண்டும். தீவிரவாதத்தை பற்றி கேரள சட்டமன்றத்தில் கூட பேசப்பட்டு உள்ளது. இவர்களுக்கு வேண்டிய கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம்.. ஆனால், சொல்ல வேண்டிய கருத்தை வைத்து எடுத்தால் கருத்து சுதந்திரம் கிடையாது உடனே தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். அதனால் எல்லோரும் பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. நாங்கள் எல்லாம் பார்க்க போகிறோம். உண்மைத்தன்மை எங்கு இருந்தாலும் அதை பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.