ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திமுகவில் இணைவார்: ஜெயக்குமார்

ஓ.பன்னீர்செல்வம் விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை, என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு இடையே ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.கஸ்டாலினின் மருமகனுமான சபரீசனை சந்தித்து பேசினார். சபரீசன் மற்றும் ஓபிஎஸ் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பைப் பற்ற வைத்தன. ஓ.பன்னீர்செல்வத்திற்கு தனது குழந்தைகளை அறிமுகப்படுத்திய சபரீசன் அதன் பிறகு அவருடன் தனிப்பட்ட முறையில் சிறிது நேரம் பேசியுள்ளார். சபரீசன் சி.எஸ்.கே ஜெர்சி, தொப்பி அணிந்தபடி ஓ.பன்னீர்செல்வத்துடன் பேசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதிமுகவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் குற்றம்சாட்டிவரும் நிலையில், இந்தச் சந்திப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்- சபரீசன் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பூனைக்குட்டி வெளியே வந்தது… சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு” எனக் குறிப்பிட்டு இருந்தார். அதிமுக தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஓபிஎஸ் திமுகவிடம் ஆதரவு கேட்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜக தன்னைக் கைவிட்டு விட்டதால் திமுக பக்கம் ஓபிஎஸ் சாய்கிறார் என்றும் எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சபரீசன் – ஓபிஎஸ் சந்திப்பின் மூலம், ஓபிஎஸ் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார் என்பது நிரூபணமாகியுள்ளது. ஏற்கெனவே சட்டப்பேரவையில் கருணாநிதி மற்றும் ஸ்டாலினைப் பாராட்டிப் பேசினார் ஓபிஎஸ். தற்போது பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக சபரீசனுடனான சந்திப்பின் மூலம் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார். விரைவில் திமுகவில் இணைந்தாலும் ஆச்சரியப்படுபவதிற்கில்லை” எனத் தெரிவித்தார்.