அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் இன்ஜினியர் பலி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஆலன் பிரீமியம் வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் பலியானவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 27 வயதான பெண் இன்ஜினியரும் ஒருவர் என்ற தகவலை போலீசார் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள டல்லாஸில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன் தினம் திடீரென அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார். கண்ணில் பார்க்கும் நபர்களை எல்லாம் அவர் சுட்டுத் தள்ளினார். இதையடுத்து போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அந்த நபர் கொல்லப்பட்டார். இருப்பினும், அதற்கு முன்பே 9 பேர் அவரது கொடூர தாக்குதலில் உயிரிழந்தனர். இதனிடையே இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட 9 பேரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ப்ராஜெக்ட் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். அந்த பெண் ஐஸ்வர்யா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மெக்கின்னி என்ற பகுதியில் வசித்து வந்த அவர், தனது நண்பருடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தபோது இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் மாலின் வெளியே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த இந்த ஐஸ்வர்யா தெலங்கானாவைச் சேர்ந்தவர் ஆவர். அங்குள்ள ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதியின் மகள் தான் ஐஸ்வர்யா. இவர் பெர்ஃபெக்ட் ஜெனரல் கான்ட்ராக்டர்ஸ் எல்எல்சி நிறுவனத்தில் திட்டப் பொறியாளராகப் பணிபுரிந்தார். ஐஸ்வர்யாவின் உயிரிழப்பை அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரும் உறுதி செய்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குச் சற்று நேரத்திற்கு முன்பு தான், ஐஸ்வர்யா தனது குடும்ப உறுப்பினர்களுடன் பேசியிருந்தார். இந்தத் துப்பாக்கிச் சூடு பற்றி அறிந்ததும் மீண்டும் அவர்கள் ஐஸ்வர்யாவைத் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். இருப்பினும், அவர்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று நீதிபதியின் நண்பர் ஒருவர் தெரிவித்தார். மேலும், அவரது உடலை வரும் புதன்கிழமைக்குள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ஒரு பொறியியலாளராக டெக்சாஸில் வசித்து வந்தார். இந்தச் சம்பவத்தில் அவரது நண்பரும் படுகாயமடைந்துள்ளார். அவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், அவர் யார் என்பது குறித்துக் கூடுதல் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.