முதல்வரை நேரில் சந்தித்தது நான் பெற்ற பாக்கியம் என்று பிளஸ் 2வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி நந்தினி கூறியுள்ளார். உயர்கல்விக்கு உதவி செய்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாகவும், பிளஸ் 2வில் முழு மதிப்பெண்கள் பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் நேற்று வெளியானது. பிளஸ் 2 தேர்வில் திண்டுக்கலைச் சேர்ந்த மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்று 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு என முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. இந்த சாதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவி நந்தினி,600 மதிப்பெண்கள் எடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் எனக்கு ஊக்கம் அளித்தனர் என்று கூறினார். படிப்பு மட்டும் சொத்து என்று கூறி தான் பெற்றோர்கள் என்னை வளர்த்தார்கள். நான் கேட்டதை எல்லாம் எனக்கு வாங்கிக் கொடுத்தனர். அரசு உதவி பெறும் பள்ளியில் பணம் கட்டி படிக்க வைத்தனர். படிப்பதுதான் எனது சொத்து என்று நினைத்து படித்த காரணத்தால் தான் இந்த அளவுக்கு மதிப்பெண்கள் கிடைத்துள்ளது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.
மாணவி நந்தினிக்கு ஆசிரியர்கள் மட்டுமல்லாது மாவட்ட ஆட்சியர் விசாகன், திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் அழைத்து மாணவி நந்தினியை பாராட்டி வாழ்த்தினார். முதல்வர் உடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணவி நந்தினி, இது எனக்கு கிடைத்த பாக்கியம் என்று கூறினார். 600க்கு 600 மதிப்பெண்கள் பெறுவதற்கு காரணம் எனது பெற்றோர்களும், ஆசிரியர்களும்தான் அவர்களுக்கு எனது நன்றி என்று சொன்னார்.
எனது உயர்கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் ஐயா கூறியுள்ளார். ஆடிட்டர் ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்று முதல்வரிடம் கூறினேன். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் கூறியதாகவும் மாணவி நந்தினி தெரிவித்தார்.