ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு எதிராக மக்களவை சபாநாயகரிடம் அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம் மனு அளித்துள்ளார். தேனி எம்.பி ரவீந்திரநாத் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவரை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி என அங்கீகரிக்கக் கூடாது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட அன்றே ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் உள்ளிட்டோரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த அறிவிப்பின் அடிப்படையில், ஓ.பி.ரவீந்திரநாத் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவர் அதிமுகவில் இல்லை என சுட்டிக்காட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். கட்சியிலிருந்து நீக்கியதால் அவரை அதிமுக எம்.பி ஆக கருத வேண்டாம் எனக் குறிப்பிட்டிருந்தார். அதற்கு ஓ.பி.ரவீந்திரநாத் பதில் கடிதம் எழுதினார். அதில், அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருப்பதால் இந்த கடிதத்தை ஏற்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார். இதில், ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஓபிஎஸ் தரப்பு கேட்டுக்கொண்டபடி ஓபி ரவீந்திரநாத், அதிமுக எம்.பியாகவே செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்திலும், அதைத் தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவே கிடைத்தது. இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையமும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு மனு அளித்துள்ளது. எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி ஆக அங்கீகரிக்கக்கூடாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விசண்முகம் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளார். மேலும் கட்சியில் இருந்து ஓ.பி.ரவீந்திரநாத் நீக்கப்பட்ட அறிவிப்பும் இந்த மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த முறை அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டுள்ளதால், லோக்சபா சபாநாயகர் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தற்போதைய சூழலில் லோக்சபாவில் இருக்கும் ஒரே ஒரு அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் மட்டுமே. அவரையும் அதிமுக இல்லை என் சபாநாயகர் முடிவு செய்தால், லோக்சபாவில் அதிமுகவுக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை என்றாகிவிடும். எனினும், ஓபிஎஸ்ஸை முழுமையாக ஒதுக்கிவைக்கும் வகையில் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஈபிஎஸ் தரப்பு.