‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ குறும்படத்தில் நடித்து ஆஸ்கர் விருது வென்று உலகம் முழுவதும் புகழ்பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை சிஎஸ்கே கேப்டன் தோனி இன்று சென்னையில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வசித்து வருபவர் பொம்மன்-பெள்ளி தம்பதி. பழங்குடி இனத்தை சேர்ந்தவர். இவர்கள் யானைகள் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் தாயை பிரிந்த 2 குட்டி யானைகளை இவர்கள் பராமரித்து வந்தனர். அந்த யானைகளுக்கு ரகு, பொம்மி என பெயர்சூட்டி இருவரும் தங்களின் குழந்தைகள் போல் வளர்த்தனர். யானை குட்டிகளை இந்த தம்பதி எப்படி பராமரித்தனர் என்பதை மையமாக கொண்டு ‛தி எலிபன்ட் விஸ்பரரஸ்’ என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். குனீத் மோங்கா தயாரித்திருந்தார். இந்த படத்தில் பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும், யானைக்குட்டிகளுக்கும் இடையேயான உறவு என்பது மிகவும் நேர்த்தியாக காட்டப்பட்டு இருந்தது. பெற்ற குழந்தைகளை போல் பாவித்து இருகுட்டிகளையும் தம்பதி வளர்த்தும், பெற்ற அம்மா, அப்பாவை போல் பொம்மன்-பெள்ளி தம்பதியோடு யானைக்குட்டிகள் ஒன்றி இருப்பது போன்றவை அனைவரையும் கவர்ந்தது.
இந்த ஆவணப்படம் சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விழாவில் விருது வாங்கியது. இதன்மூலம் பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர். இதையடுத்து பொம்மன்-பெள்ளி தம்பதியை முதல்வர் ஸ்டாலின் அழைத்து பாராட்டி ரூ.1 லட்சம் பரிசாக வழங்கினார். இயக்குநர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சென்று பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்டினார். தேவையான உதவிகளை தன்னிடம் கேட்கும்படி அவர் கூறிவிட்டு சென்றார்.
இதன் தொடர்ச்சியாக தான் இன்று பொம்மன்-பெள்ளி தம்பதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியை சந்தித்தனர். ஆவணப்பட இயக்கனர் கார்த்திகி, பொம்மன்-பெள்ளி ஆகியோர் ஒன்றாக தோனியை சந்தித்து பேசினர். 3 பேரையும் தோனி சிரித்த முகத்துடன் வரவேற்று வெகுவாக பாராட்டினார். மேலும் அவர்களுக்கு கிஃப்டாக சிஎஸ்கே ஜெர்சியை டோனி வழங்கியதோடு அனைவருடனும் சேர்ந்து போட்டோக்கள் எடுத்து கொண்டார். தோனி வழங்கிய அந்த ஜெர்சியில் அவரது அதிர்ஷ்ட எண் 7 பொறிக்கப்பட்டு இருந்தது. மேலும் தோனி என்ற பெயருக்கு பதில் கார்த்திகி, பொம்மன், பெள்ளி என அவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு இருந்தது. பொம்மன்-பெள்ளி, கார்த்திகி ஆகியோர் மகிழ்ந்தனர். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.