ஓராயிரம் ரவிகள் வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு

ஓராயிரம் ரவிகள் வந்தாலும் திமுக ஆட்சியை அசைக்க முடியாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறும் வகையில் திமுகவினர் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை கொரட்டூர் பேருந்து நிலையம் அருகே திமுக இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

கவர்னர் என்னை மதிப்பிற்குரிய நண்பர் என்று குறிப்பிட்டார். அவர் என்னை நண்பர் என்று குறிப்பிட்டதற்காக அவருக்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் கொள்கையிலே அவர் எங்களோடு சமரசமாக இல்லை என்றால் நிச்சயமாக கொள்கைக்காக நட்பை துறக்கவும் நான் தயார் என்று அறிவித்தவர் தான் நமது முதலமைச்சர். கடுமையான காலகட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நான்கு மாதங்களுக்குள் கொரோனா நோய் தொற்றே இல்லாத கொரோனா சுவடே இல்லாத மாநிலமாக தமிழ் நாட்டை மாற்றிய பெருமை நமது முதல்வரையே சாரும். இந்த முதல்வர் இருக்கின்ற வரை ஒரு கவர்னர் ரவி அல்ல, ஓராயிரம் ரவிகள் ஒன்று கூடி வந்தாலும், இந்த ஆட்சியை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.