பிடிஆரின் இலாகா மாற்றம் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. ஏற்கனவே பால்வளத்துறை அமைச்சர் நாசர் மாற்றப்பட்டு டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டார். அவருக்கு தொழில்துறை வழங்கப்பட்டது. அவரது பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, மற்ற அமைச்சர்களின் இலாகா மாற்றங்கள் குறித்த அறிவிப்பு அதிரடியாக வெளியானது. இதில் எதிர்பார்த்தது போலவே, அமைச்சர் பிடிஆர் வகித்து வந்த நிதித்துறை இலாகா மாற்றப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது. அதுபோல, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுக்கு நிதித்துறை வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோல, மற்ற அமைச்சர்களின் இலாக்காக்களும் மாற்றப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டதற்கு அவரது ஆடியோ விவகாரம்தான் முக்கிய காரணம் என்பது பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது. உதயநிதி ஸ்டாலினும், முதல்வரின் மருமகன் சபரீசனும் அவர்களின் மூதாதையர்களை விட அதிகமாக சம்பாதித்துவிட்டதாக பிடிஆர் பேசுவது போல வெளியான ஆடியோ பொதுமக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உதயநிதி ஸ்டாலினுக்கு இதுநாள் வரை திமுக கட்டமைத்து வந்த பிம்பத்தை நொறுக்குவதாக இந்த ஆடியோ விவகாரம் அமைந்தது.
இதனிடையே, இந்த ஆடியோ போலியாக உருவாக்கப்பட்டது என பிடிஆர் விளக்கம் அளித்தார். மேலும், இதை ஆமோதிப்பது போல இந்த ஆடியோ விவகாரத்தை மட்டமான அரசியல் என ஸ்டாலினும் கூறியிருந்தார். இதனால் பிடிஆர் மீது நடவடிக்கை இருக்காது என்றே கருதப்பட்டு வந்தது. ஏனெனில், பிடிஆர் மீது நடவடிக்கை எடுத்தால் பாஜக வெளியிட்ட ஆடியோ உண்மையானது என்று ஆகிவிடும் என்பதால் இந்த விஷயத்தை திமுக தலைமை அப்படியே விட்டுவிடும் என பேச்சுகள் அடிபட்டன. இந்த சூழலில்தான், பிடிஆரின் நிதித்துறை இலாகா அதிரடியாக பறிக்கப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:-
அமைச்சர் பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படாத சூழலில் அவரது இலாகா பறிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே அந்த ஆடியோ உண்மைதான் என நிரூபணமாகியுள்ளது.
சமூக நீதியை பேசும் திராவிட மாடல் திமுக அரசு, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவியையோ அல்லது முக்கிய துறைகளையோ தர வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. எனவே திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியே உள்ளது என்பது உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.