ஆளுநர் பதவி பிரிட்டிஷ்காரர்களின் எச்சம் என திமுக எம்.பி கனிமொழி பேசியிருந்த நிலையில், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது சட்டையை கிழித்துக்கொண்டு ஓடி மனு கொடுக்கும்போது அது தெரியவில்லையா?” என்று விமர்சித்துள்ளார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்.
“ஆளுநர் கூறுவது போல் திராவிட கருத்தியல் காலாவதியானது அல்ல, அவரது பதவிதான் காலாவதியானது. பிரிட்டிஷ் அரசின் மிச்சம், எச்சம் தான் ஆளுநர் பதவி. அதை தூக்கிப் போட வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்நிலையில், இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அர்ஜூன் சம்பத், கனிமொழியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். திமுக எம்.பி கனிமொழி, ஆளுநர் பதவி என்பது பிரிட்டிஷ் அரசின் மிச்சம் எச்சம் என்று பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அர்ஜுன் சம்பத், “எதிர்க்கட்சியாக இருந்த போது சட்டையை கிழித்துக்கொண்டு ஆளுநர் மாளிகைக்கு ஓடி மனு கொடுக்கும்போது அது தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அர்ஜுன் சம்பத், “ஆளுநரை அவமதித்தால் அரசியல் சாசனத்தை அவமதித்தது போன்ற குற்றம். நாலாந்தர பேச்சாளரை விட்டு திட்டுவது தான் திமுகவின் ஸ்ட்ராட்டஜி. இப்படி பேசுபவர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், “நாடார் சமுதாயத்தினருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை கிறிஸ்தவ நாடார் என்ற சாதி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு இந்து நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படுகிறது. நாடார்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிறுபான்மையினராக மாறி வருகிறார்கள். மதம் மாறி செல்கின்றவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக்கூடாது. இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ குறித்து உண்மைத் தன்மையைக் கண்டறிந்து அதை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார் அர்ஜுன் சம்பத். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது எனத் தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.