உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஹெலிகாப்டர், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடங்கிய போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனில் சில நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றியது. உக்ரைன் ராணுவமும் கடுமையாக போரிட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் ஹெலிகாப்டர், விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையையொட்டியுள்ள தெற்கு ரஷ்ய பிராந்தியத்தின் பிரையன்ஸ்க் பகுதியில் ரஷ்ய ஹெலிகாப்டர் (எம்.ஐ.-8), சு-35 போர் விமானம் மற்றும் சு-34 போர் விமானம் ஆகியவை பறந்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நடந்தது.
பிரையன்ஸ்க் பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் போகோமாஸ் கூறும்போது கிளிண்ட்சி நகரில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 5 வீடுகள் சேதமடைந்தன. ஒரு பெண், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இதற்கிடையே தெற்கு உக்ரைனில் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா பகுதியில் அதிகாரியான விளாடிமிர் ரோகோவ் கூறும்போது, ‘நான்கு ரஷ்ய விமானங்கள் வானத்தில் இருந்து சுடப்பட்டது. ஹெலிகாப்டர்கள் மற்றும் சு-34 விமானத்தில் இருந்த வீரர்கள் உயிரிழந்தனர் என்றார். இதை உக்ரைன் தரப்பும் உறுதிபடுத்தியது.
உக்ரைன் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறும் போது, ரஷ்யர்கள் இன்று மிகவும் வருத்தமடைந்துள்ளனர். அவற்றை நாம் புரிந்து கொள்ளமுடியும். இரண்டு ஹெலிகாப்டர் மற்றும் இரண்டு போர் விமானங்கள் குறைந்துள்ளன என்றார். இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.