உழைச்சா தான் பதவி: மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவரது செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறேன் கட்சி பணிகளில் எந்தவித சுணக்கமும் இருக்கக் கூடாது என எச்சரித்துள்ளாராம் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுகவின் 72 மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள், திமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர திமுக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வது தொடர்பாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தின்போது திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்ய வேண்டும். அனைவரது செயல்பாடுகளையும் கண்காணித்து வருகிறேன். கட்சி பணிகளில் எந்தவித சுணக்கமும் இருக்கக் கூடாது. உழைக்கும் நபர்களுக்கே திமுகவில் இடம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என ஸ்டாலின் கடுமையாகப் பேசியுள்ளார்.

ஏதாவது தவறுகள் நடப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்படுவீர்கள், கட்சிக்காக உழைக்காதவர்கள் யாராக இருந்தாலும் கட்சியில் இடம் கிடையாது என கடுமையாக எச்சரித்ததாக கூறப்படுகிறது. மேலும், வரும் 2024 மக்களவை தேர்தல் தான் நம்முடைய அடுத்த இலக்கு. அதில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும். தற்போது முதல் இலக்கு நிர்ணயித்து களப் பணிகளை விரைவுபடுத்துங்கள் என அறிவுறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவற்றில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும். தேர்தலில் 40க்கு 40 வெற்றியை உறுதி செய்ய வேண்டியது மாவட்ட செயலாளர்களின் பொறுப்பு என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.