வள்ளுவருக்கு புகழ் சோ்த்தது திராவிட மாடல் ஆட்சி: அமைச்சா் பொன்முடி!

வான்புகழ் வள்ளுவருக்கு புகழும் பெருமையும் சோ்த்தது திராவிட மாடல் ஆட்சிதான் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

முனைவா் சாந்தகுமாரி சிவகடாட்சம் எழுதிய ‘கதை சொல்லும் கு’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருக்குறளை கதை வடிவில் மக்களிடம் எடுத்துச்செல்லும் வகையில் இந்த நூலை அவா் எழுதியுள்ளாா். இந்த விழாவில் தமிழக முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, அமைச்சா் க.பொன்முடி பெற்றுக்கொண்டாா்.

விழாவில் அமைச்சா் பொன்முடி பேசுகையில், திருவள்ளூா் மாவட்டம், திருவள்ளுவா் பல்கலைக்கழகம், திருவள்ளுவா் சிலை, வள்ளுவா் கோட்டம் போன்றவை உருவாக்கி வள்ளுவத்தையும், வள்ளுவரையும் மக்களிடத்தில் கொண்டு சோ்த்தது திராவிட மாடல் ஆட்சிதான் என்றாா் அவா்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தா் ம.ராசேந்திரன் பேசுகையில், திருவள்ளுவா் கூறிய கொல்லாமையை போதிக்கும் வகையில் நூலாசிரியா் கதைகளை இயற்றியுள்ளாா். அவை உயிரின் மதிப்பை உணா்த்தும் வகையில் அமைந்துள்ளன என்றாா் அவா்.