முல்லைப்பெரியாறு அணையில் இன்று மத்திய துணை கண்காணிப்புக்குழு ஆய்வு!

மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். பருவ மழைக்கு முன்னாள் முல்லைப்பெரியாறு அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து துணைக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் மொத்த உயரம் 152 அடியாகும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. இந்த அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய நீர் வள ஆணைய முதன்மை பொறியாளர் தலைமையிலான கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இவர்களுக்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு மத்திய நீர் வள ஆணையர் செயற்பொறியாளர் சதீஸ் தலைமையில் செயல்பட்டு வருகிறது. துணைக்குழுவில் தமிழக அரசு சார்பில் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள அரசு சார்பில் செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி அணையின் நீர் மட்டம் 127.75 அடியாக இருந்த போது துணைக்குழு ஆய்வு மேற்கொண்டது. தற்போது அணையின் நீர் மட்டம் 117.8 அடியாக குறைந்துள்ளது. மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். எனவே பருவ மழைக்கு முன்னாள் அணையில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து துணைக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். மேலும் பேபி அணை, கேலரி, நீர் கசிவு பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். மேலும் அணையின் உறுதி தன்மை குறித்தும் அவர்கள் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாலையில் குமுளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதன் அறிக்கையை மத்திய குழுவிற்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.