கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் சனிக்கிழமை இரவு விஷச்சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சுரேஷ், ராஜமூர்த்தி, மலர்விழி, விஜயன், சங்கர், ராஜவேல், ஆபிரகாம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 38 வயதான ராஜவேல் என்பவர் நேற்று காலை உயிரிழந்தார். இதனால், எக்கியார்குப்பத்தில் விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. முண்டியம்பாக்கம் மற்றும் மரக்காணம் அரசு மருத்துவமனைகளில் 52 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மெத்தனால் ஆலை உரிமையாளரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.

இதனிடையே தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிப்பதற்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளதை பொதுமக்கள் இடையே பிரபலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரி ஆகியோரின் வாட்ஸ் ஆப் எண்களை அறிவித்து, அதன் மூலம் புகார்களை பெற வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பெறப்படும் புகார்களை மதுவிலக்கு காவல்துறை இயக்குநர் கண்காணித்து, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது . காவல்துறை அலுவலர்கள் தங்களின் முழு திறமையையும், நீண்ட அனுபவத்தையும் பயன்படுத்தி பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் சிறப்பாகச் செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டுமென்றும், இதனை பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிரைக் கொண்டு நடத்திட வேண்டுமென்றும்; தொழிற்சாலைகளில். எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணித்து, அது விஷச் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை, காவல் துறை மற்றும் உதவி ஆணையர் (கலால்) அவர்கள் கண்காணித்திட வேண்டுமென்றும், அதோடு, மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் உயரதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.