இவுங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தறேன் என முதல்வர் ஸ்டாலினையும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் சீமான் நக்கல் செய்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அம்மையார் ஜெயலலிதா ஒரு மாநிலத்தின் முதன்மை அமைச்சர், அவர் வாழ்ந்த இடம் கொடநாடு. ஒரு நொடி கூட மின்சாரம் அங்கு அணையாது. தனி மின்மாற்றி உள்ளது. அது தனி தீவு.. அப்படியான இடத்தில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை அணைத்தது யாருடைய ஆட்சியில்.. அங்கு 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இறந்தவர்கள் யார்? எந்த நோக்கத்திற்காக கொன்றார்கள். அதுவும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வாழ்ந்த வீட்டிலேயே கொன்றார்கள் என்றால் எங்களுக்கு எல்லாம் என்ன பாதுகாப்பு இருக்கும். அந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்று அன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகி இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு பதில் இருக்கிறதா? மாறி மாறி குறை சொல்றீங்க.. நீங்க இரண்டு பேரும் ஒழியணும் அப்படீன்றது தான் எங்க கணக்கு. முடிஞ்சா நீங்க இரண்டு பேரும் (ஸ்டாலின், எடப்பாடி) கள்ளச்சாராயம் குடிச்சிட்டு போங்க.. உங்க இரண்டு குடும்பத்துக்கும் 10 கோடி ரூபாய் நான் தருகிறேன்..என்று சீமான் கடுமையாக பேசினார்.
மேலும் மரக்காணம் கள்ளச்சாரய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அரசு அறிவித்திருப்பதையும் சீமான் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், இரண்டு வருடமாக சாராயம் விற்றுக் கொண்டிருந்தார்கள் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த சாவுகள் மட்டும் வரவில்லை என்றால் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனை மீதி உள்ள ஆண்டுகளிலும் நடந்திருக்கும் அல்லவா என்று சீமான் கேள்வி எழுப்பினார். சீமான் தொடர்ந்து கேள்வி கேட்கும் போது, கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு எதற்காக பத்து லட்சம் , யார் பணத்தில் இந்த 10 லட்சத்தை அறிவிக்கிறீர்கள்.. இதுவரை 19 பேருக்கு கொடுத்துள்ளீர்கள். இன்னும் இறந்தவர்களுக்கு தருகிறீர்கள். இந்த கள்ள சாராய வழக்குகளில் இதுவரை 1500 பேருக்கு மேல் கைது செய்துள்ளதாக கூறுகிறீர்கள். அவர்களிடம் தண்ட தொகையை வசூலித்து அதை அல்லவா இறந்தவர்களுக்கு நிவாரணமாக கொடுத்திருக்க வேண்டும்.. ஏன் நீங்கள் மக்கள் பணத்தை எடுத்து கொடுக்கிறீர்கள்.. என்று சீமான் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் கள்ளச்சாராயம் விற்பவர்களை ஊக்குவிக்கிறீர்களா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.