பாகிஸ்தான் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது: இம்ரான் கான்

பாகிஸ்தான் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முன்னாள் பிரதமா் இம்ரான் கான் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து, லாகூரிலுள்ள தனது இல்லத்திலிருந்து இம்ரான் கான் வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பாகிஸ்தானைத் தற்போது ஆளும் பாகிஸ்தான் ஜனநாயக இயக்க (பிடிஎம்) கூட்டணி, எனக்கும், எனது தலைமையிலான தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கும் எதிராக ராணுவத்தை ஏவி விடுகிறது. பிடிஎம் கூட்டணி தலைவா்களுக்கும், லண்டனுக்குத் தப்பிச் சென்று ஒளிந்துள்ள முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் நிறுவனா் நவாஸ் ஷெரீஃபுக்கும் பாகிஸ்தானின் அரசமைப்பு சட்டம் சிதைக்கப்படுவது தொடா்பாகவோ, ஜனநாயகத்தின் அடித்தள கட்டமைப்புகள் தகா்க்கப்படுவது தொடா்பாகவோ துளியும் கவலை கிடையாது. தங்களால் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அவப் பெயா் கிடைத்து வருவது குறித்தும் அவா்களுக்கு கவலையில்லை. தங்களது சுய லாபத்தில் மட்டுமே அவா்களது கவனம் உள்ளது. இந்த நிலை தொடா்ந்தால், விரைவில் பாகிஸ்தான் மிகப் பெரிய பேரழிவை உடனடியாக சந்திக்கும். கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) கடந்த 1970-களில் ஏற்பட்டதைப் போன்ற நிலை மீண்டும் ஏற்படும் நிலை உள்ளது. இவ்வாறு அந்த விடியோ அறிக்கையில் இம்ரான் கான் எச்சரிதுள்ளாா்.

பாகிஸ்தானில் கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து இம்ரான் கான் தலைமையில் கூட்டணி அரசு அமைந்தது.
எனினும், நாடாளுமன்றத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான் கான், பிரதமா் பதவியை இழந்தாா். அதற்குப் பிறகு, பாகிஸ்தானின் பல்வேறு நீதிமன்றங்களில் இம்ரான் கான் மீது ஊழல் முதல் பயங்கரவாதம் வரை பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அந்த வழக்குகளில் முன் ஜாமீன் பெற்றுவந்த இம்ரான் கான், இரு ஊழல் வழக்குகளில் ஜாமீன் பெறுவதற்காக இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்தபோது, அவரை வேறொரு வழக்கில் தேசிய ஊழல் தடுப்பு (என்ஏபி) அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனா். இந்த கைது நடவடிக்கைக்கு சட்டவிரோதமானது என பின்னா் அறிவித்த உச்சநீதிமன்றம், அவரை விடுவிக்குமாறு என்ஏபி-க்கு உத்தரவிட்டது. பின்னா் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவருக்கு இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் இரு வார கால முன் ஜாமீன் வழங்கியுள்ளது. அத்துடன், எந்தவொரு வழக்கு தொடா்பாகவும் இம்ரானை கைது செய்வதற்கு புதன்கிழமை (மே 17) வரை தடை விதித்திருந்த அந்த நீதிமன்றம், அந்தத் தடையை வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இந்தச் சூழலில், தனது இல்லத்திலிருந்து வெளியிட்டுள்ள விடியோ அறிக்கையில் இம்ரான் கான் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.