ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு விழா குழுவினர் நன்றி கூறியுள்ளனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டித் தலைவர் தா. ரகுபதி, பாலமேடு மடத்து கமிட்டி ஜல்லிக்கட்டு தலைவர் கி. பிரபு, எம்.ஆர்.எம். பாலசுப்ரமணியம், ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் பி. ராஜசேகர், வாடிப்பட்டி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு கழகத் தலைவர் திரு. பிரபுபால் பாண்டி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினர் கண்ணன், அழகாபுரி ஆ. புதுப்பட்டி ஜல்லிக்கட்டு விழாக் குழு தலைவர் பரந்தாமன், ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர்.
இதேபோல் மதுரை மேலூர் தாலுகா சருகுவலையப்பட்டி கிராம விழாக் குழு நிர்வாகிகள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர் மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவைகளின் நிர்வாகிகள் சந்தித்து, தமிழர்தம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை சட்டப் போராட்டம் நடத்தி பெற்று தந்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். அவர்களுடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை தெற்கு மாவட்ட கழக திமுக செயலாளர் மணிமாறன் ஆகியோர் இருந்தனர்.