ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வழக்கு!

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சி.எஸ்.கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி விரைவில் ஓய்வு பெற இருப்பதால் அதற்குள் அவர் மைதானத்தில் விளையாடுவதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் ரசிகர்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு மிகப்பெரிய டிமாண்ட் மார்க்கெட்டில் உள்ளது. கள்ளச்சந்தையிலாவது டிக்கெட்டை வாங்குவதற்கு ரசிகர்கள் முட்டி மோதுகின்றனர். இதனால், வழக்கமான டிக்கெட் விலையை விட இரு மடங்கு, மும்மடங்கு விலை அதிகம் கொடுத்து பலரும் மேட்ச் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில், சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி என்ற கிரிக்கெட் ரசிகர், சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அசோக் சக்கரவர்த்தி தாக்கல் செய்த மனுவில், “கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டின் ஏழு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளுக்கான ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட்டுகள் விற்பனை செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளன. மே 23, 24ஆம் தேதிகளில் தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் நடந்த டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளது. இப்போட்டிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறது. எனவே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஏழு போட்டிகளின்போது ஆன்லைன் மூலம் விற்கப்பட்ட டிக்கெட்டுகள் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.