கர்நாடகா முதல்வராக சித்தராமையா, து.முதல்வராக டிகே சிவக்குமார் பதவியேற்பு!

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பெங்களூரில் இன்று பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கர்நாடகா சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை பறித்தது. கர்நாடகாவை பொறுத்தமட்டில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மாறாக பாஜக 66 இடங்களில் மட்டுமே வென்று ஆட்சியை இழந்தது. ஜேடிஎஸ் கட்சி 19 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் தேர்வு துவங்கியது. முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக சித்தராமையாவை முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் இன்று பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் மதியம் 12.30 மணிக்கு நடந்த விழாவில் பதவியேற்றனர். சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இவர்கள் அனைவருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இன்று காலையில் புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியானது. முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் 8 பேரும் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் பிரியங்க் கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் ஆவார். இதன்மூலம் இன்று முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டிகே சிவக்குமார் மற்றும் 8 அமைச்சர்கள் என மொத்தம் 10 பேர் பதவியேற்றனர். அதன்பிறகு அடுத்த கட்டமாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.