ஜி7 உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஹிரோஷிமா சென்றுள்ளார். இந்நிலையில், ஜி7 மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. அதன் பிறகு ஜெலன்ஸ்கியும், நரேந்திர மோடியும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை. இந்த சந்திப்பின்போது, நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், உக்ரைன் பிரதமர் அலுவலக தலைவர் ஆன்ட்ரீ யெர்மாக்கும் உடன் இருந்தனர்.
முன்னதாக, நரேந்திர மோடியும், ஜெலன்ஸ்கியும் தொலைபேசி மூலமாக பலமுறை உரையாடி இருக்கிறார்கள். போர் தொடங்கியபோது உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் நோக்கில் நரேந்திர மோடி, ஜெலன்ஸ்கி உடன் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு அது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர் மோடி, இது போருக்கான காலம் அல்ல என்றும், போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ராஜிய ரீதியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதையடுத்து, ரஷ்யாவின் நட்பு நாடாக உள்ள போதிலும், உக்ரைனுக்கும் நம்பிக்கைக்கு உரிய நாடாக இந்தியா இருப்பதை மோடி உறுதி செய்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் இந்தியா வந்த உக்ரைன் துணை வெளியுறவு அமைச்சர் எமினி ஜபாரோவா, டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்தார்.
ஹிரோஷிமா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்தோனேஷிய பிரதமர் ஜோகோ விடோடோ, ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ கட்டரஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, ஜப்பான் பிரதமர் கிஷிடா, தென் கொரிய அதிபர் யோன் சுக் யோல், வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸ் ஆகியோரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.