தெற்கில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த விடியல், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும்: ஸ்டாலின்

தெற்கில் இன்று உதித்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்று கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டது குறித்து புகைப்படங்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல் மந்திரியாகவும், துணை முதல் மந்திரியாக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர். இதற்கான பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா ஸ்டேடியத்தில் இன்று கோலாகலாமக நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், பெங்களூருவில் சித்தராமையாவின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளதாவது:-

கர்நாடக முதல்வராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இவர்கள் இருவரும், தங்களது திறமையான ஆட்சியின்மூலம் கர்நாடக மாநிலத்தை அடுத்த உயரத்துக்குக் கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

தெற்கில் உதயமான இந்த விடியல் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வேண்டும், பெங்களூரில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழா அத்தகைய மாற்றத்தின் ஒரு அழைப்புமணியாக இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.