அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்துவதால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மாவட்ட செயலாளர்கள் நேற்று சென்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், ‘அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பின்னர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சி தொண்டர்களின் ஒருமித்த கருத்தோடு ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இதனை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அங்கீகரித்து உள்ளது. இன்றைக்கு அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்போடும், எழுச்சியோடும் வலுப்பெற்று வருகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழுவால் நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தவும், கட்சியின் பெயரை சொல்வதற்கும் தகுதியற்றவர்கள். நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தின் உத்தரவும் இதுதான். எனவே ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. என்ற பெயரை பயன்படுத்த கூடாது. கட்சியின் இரட்டை இலை சின்னத்தை உபயோகிக்க கூடாது. கட்சி கொடியை பயன்படுத்த கூடாது. ஆனால் இதையெல்லாம் மீறி சட்டத்தை நாங்கள் மதிக்க மாட்டோம். சட்டம் என்ன செய்யும்? என்ற வகையில் தாந்தோன்றி தனமாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அ.தி.மு.க. பெயர், சின்னம், கொடியை பயன்படுத்துவது, அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயரில் ‘லெட்டர் பேடை’ பயன்படுத்துவது சட்ட விரோத செயல் ஆகும். இவர்கள் மீது மோசடி, முறைகேடு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கு காரணங்கள் சரியாக இருக்கிறது.
கர்நாடக தேர்தலில் எங்கள் கட்சியின் பெயரை சொல்லி அவர்கள் (ஓ.பன்னீர்செல்வம் தரப்பு) வேட்புமனு தாக்கல் செய்த போது நாங்கள் புகார் அளித்தோம். அதன்பேரில் கர்நாடகா போலீசார் இந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். எனவே தமிழக போலீஸ் டி.ஜி.பி. இது போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் அறிவுறுத்த வேண்டும். குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான் சேலத்தில் (ஓ.பன்னீர்செல்வம் அணி ஆலோசனை கூட்டம்) எங்கள் கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் எங்கள் கட்சிக்காரர்களை அழைத்து விசாரித்து உள்ளனர். இது எந்தவிதத்தில் நியாயம்?. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள். எனவே போலீஸ் டி.ஜி.பி.யை நேரில் சந்தித்து இதுபற்றி வலியுறுத்தினோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே போலீஸ் துறை நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.