தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை ஒழிப்பது குறித்த வெள்ளை அறிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 10 நாட்களில் வழங்க உள்ளதாக அண்ணாமலை பேசினார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். பா.ஜ.க. மகளிர் அணி மாநில துணை தலைவி சங்கீதா மணிவாணன், மாநில பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேஷ், பிரமிளா சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நமீதா, காயத்ரி தேவி, சவுதாமணி, மேற்கு மாம்பலம் கவுன்சிலர் உமா ஆனந்தன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
தமிழகத்தில் கடந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம் ரூ.44 ஆயிரம் கோடி. முந்தைய ஆண்டில் ரூ.36 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் ஒரே ஆண்டில் 22 சதவீதம் அதிகரித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும் டாஸ்மாக் விற்பனையை ஆய்வு செய்து அடுத்த மாதம் விற்பனையை உயர்த்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். இதனால் டாஸ்மாக் மூலம் தமிழகத்தில் கள்ளச்சாராயம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதாவது டாஸ்மாக்கில் குடித்து பழகியவர்கள் அதிக விலை கொடுத்து மது வாங்க முடியாமல் மலிவாக கிடைக்கும் கள்ளச்சாராயத்தை தேடி போகிறார்கள். இந்த கள்ளச்சாராய விற்பனையின் முக்கிய குற்றவாளி மருவூர் ராஜா என்பவரின் மனைவி திண்டிவனம் நகராட்சி தி.மு.க. கவுன்சிலர். மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமானவர். 2-வது முக்கிய குற்றவாளி அம்மாவாசையின் சகோதரர் தி.மு.க. ஒன்றிய செயலாளராக இருக்கிறார்.
தமிழ்நாட்டில் 9 சதவீதம் மக்கள் மதுவுக்கு அடிமையாக மாறி உள்ளார்கள். இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் 3 ஆண்டுகளில் டாஸ்மாக் விற்பனை ரூ.60 ஆயிரம் கோடியை எட்டும். மதுவுக்கு அடிமையானோர் 15, 16 சதவீதத்தை எட்டுவார்கள். எனவே, டாஸ்மாக்கை அடுத்த 3 ஆண்டுகளில் எப்படி மூடுவது என்பது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் 10 நாட்களில் முதல்-அமைச்சரிடம் வெள்ளை அறிக்கை கொடுக்க இருக்கிறோம். அதில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ரூ.44 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டுவது எப்படி?, 5 ஆயிரத்து 400 டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு கடைகளை குறைப்பது என்ற விவரங்களையும் தெரிவிப்போம். இதே போன்று, நாளை (இன்று) காலை 10 மணியளவில் பா.ஜ.க. மகளிர் நிர்வாகிகள் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து கவர்னரின் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில்பாலாஜியை நீக்குமாறு மனு அளிக்க உள்ளனர். அமைச்சர் செஞ்சி மஸ்தானை நீக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் நாங்கள் வலியுறுத்துவோம்.
கர்நாடக தேர்தல் படுதோல்வியை மறைப்பதற்காக 2 ஆயிரம் ரூபாய் நோட்டை நீக்கம் செய்திருப்பதாக டுவிட்டர் பதிவிட்டு இருக்கிறார். படுதோல்வி என்றால் 1991-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியில் 2 தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றதுதான் என்பது முதல்-அமைச்சருக்கு தெரிய வேண்டும். தமிழக மக்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்தான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பார்த்தார்கள். அடுத்ததாக 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளுக்கு பணமூட்டைகள் போய்விட்டது. ஆனால், அந்த மூட்டையில் இருப்பது அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள். எனவே, முதல்-அமைச்சர் பதறிப்போய் டுவிட்டர் பதிவிடுகிறார். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வரும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கண்காணிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.