பப்புவா நியூ கினியா நாட்டில் ‘டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பிரதமர் மோடி வெளியிட்டார். இதற்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி ‛டோக் பிசின்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார். மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கை:
பப்புவா நியூ கினியாவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையின் போது பிரதமர் மோடி டோக் பிசின் மொழியில் திருக்குறள் வெளியிடுவதை பார்த்து அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஆழமான பிணைப்பையும் மதிப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணாமலை கூறியுள்ளதாவது:-
பிரதமர் மோடி நமது திருக்குறளின் புதிய மொழிபெயர்ப்பை, பப்புவா நியூ கினியா நாட்டு மொழியான டோக் பிசின் மொழியில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் பாரம்பரியத்தின் மீதும் கொண்ட அன்பிற்காகவும், திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும், பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.