மதுரை மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் உட்பட 23 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், துணைப் பேராசிரியர் தாகிர் உசைன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரி மயக்கயவியல் துறையின் துணைப் பேராசிரிராக செய்யது தாகிர் உசைன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மீது ஆசியர் உள்பட 23 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். தங்களுக்குப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வருவதாக தாகிர் உசைன் மீது அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து கல்லூரியின் விசாகா கமிட்டி மூலம் விசாரணை செய்யப்பட்டது. விசாகா கமிட்டியிடம் இரண்டு ஆசிரியர்கள், ஒரு நர்ஸ், இரண்டு முதுநிலை மாணவிகள் உட்பட 23 மாணவிகள் எழுத்துபூர்வமாக புகார் அளித்தனர். அவர்கள் தங்கள் புகாரில், பாலியல் ரீதியாகப் பேசுவது, தவறான முறையில் தொடுவது, வர்ணிப்பது எனப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியிருந்தனர். இதையடுத்து துணைப் பேராசிரியர் செய்யது தாகிர் உசைன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருந்ததாக கருதிய தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம், அவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதனிடையே துணைப் பேராசிரியர் செய்யது தாகிர் உசைன் செய்தியாளர்களை அழைத்து பேசுகையில், “மருத்துவத்துறையில் நடைபெறும் முறைகேடுகளையும், கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராகவும் புகார் அளித்ததால், என்னைப் பழிவாங்க, முறையான விசாரணை நடத்தாமல் இப்படி நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “துணைப் பேராசிரியர் செய்யது தாகிர் உசைன், பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக கடந்த 6-ம் தேதி மயக்கவியல்துறை மாணவிகள் புகார் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து 8-ம் தேதி அவர்களிடமிருந்து எழுத்துபூர்வமான புகார் பெறப்பட்டது. என்னுடைய மேற்பார்வையில் மருத்துவக் கல்லூரி முதல்வர் தனலட்சுமி தலைமையிலான ஒன்பது பேர்கொண்ட குழு விசாரிக்க அமைக்கப்பட்டது. இதில் 18 மாணவிகள் ஒரு செவிலியர் இரண்டு பேராசிரியர்களிடம் எழுத்து மூலம் புகார் தந்தார்கள். அதை விசாரித்ததில், மாணவிகளிடம் துணைப் பேராசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டு, அது தொடர்பான அறிக்கை மருத்துவக் கல்லூரி இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மதுரை அரசு இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் ரீதியான புகார் பெறப்படுவது இதுதான் முதன்முறை. இது போன்ற புகார்கள்மீது மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” இவ்வாறு மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு கூறினார்.