காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 300 நாளை கடந்தது. இதன்படி 300-வதுநாள் போராட்டத்தை ஏரியில் இறங்கி நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சென்னையின் 2-வது பசுமை வெளி விமான நிலையத்தை அமைப்பது என்று மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கில்பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் 4,791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த இடத்தில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 100 மில்லியன் விமான பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில் இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தை தொடங்கினர். மேலும், கிராம சபைகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த வாரத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்திலும் மனுக்களை அளித்தனர்.
இதற்காக தொடர்ந்து நடந்து வரும் போராட்டம் நேற்று முன்தினம் 300-வது நாளை எட்டியது. நீராதாரங்களை அழித்து விமான நிலையம் அமைக்கப்படுவதை சுட்டிகாட்டும் வகையில் ஏரி, குளம், குட்டை, கால்வாய் உள்ளிட்டநீர்நிலைகளையும், நீர் ஆதாரங்களையும் அழிக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் ஏகனாபுரத்தில் உள்ள வயல்ஏரியில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். விளை நிலங்களையும், குடியிருப்புகளையும், ஏரி, குளங்களையும் அழித்து விமான நிலையம் வேண்டாம் என்று அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.