அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், தனது பயணத்தின் நோக்கம் பற்றி ஒளிவுமறைவின்றி பேசினார். இந்தப் பயணத்தின் போது நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை சந்திக்கவுள்ளதாக கூறியிருக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:-
வருகிற 2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவிருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு, பல்வேறு நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த அடிப்படையில், ஒன்பது நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். என்னோடு தொழில்துறை அமைச்சர் அவர்களும், அரசு துறையினுடைய உயர் அதிகாரிகளும் வருகிறார்கள்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு மார்ச் மாதம், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளோடு ஐக்கிய அரபு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே, இப்போது ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். நான் செல்கின்ற இடங்களில் எல்லாம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதோடு முதலீட்டாளர்களை நேரிலும், மாநாடுகள் வாயிலாகவும் சந்தித்தும் பேசவிருக்கிறேன். ஒரு சில புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன.
இந்த பயணத்தினுடைய முக்கிய நோக்கம் என்பது வருகிற 2024 ஜனவரி மாதம் நடைபெற இருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதுதான். ஆகவே, அந்த நோக்கத்தோடுதான் செல்கிறேன். உங்களுடைய வாழ்த்துகளோடு சொல்லுகிறேன், நீங்களும் என்னை வாழ்த்தி அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: புரிந்தணர்வு ஒப்பந்தங்கள் குறித்து..
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதில்: கடந்த மார்ச் மாதம் ஐக்கிய அரபு நாட்டின் பயணத்தின்போது பெறப்பட்டிருக்கக்கூடிய முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டீர்கள் என்றால், கடந்த முறை நான் மேற்கொண்ட துபாய் பயணத்தின்போது 6,100 கோடி ரூபாய் முதலீடுகள் மூலம் 15,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தக்கூடிய வகையில் 6 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதில் ஷெராப் குழும நிறுவன முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. லூலூ பன்னாட்டு குழுமம் கோயம்புத்தூரில் தன் திட்டத்தை தொடங்கிவிட்டது. சென்னையில், தன் திட்டத்திற்காக நிலம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. நிலம் கிடைத்தவுடன் கட்டுமான பணிகளை துவக்கிட தயாராக இருக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்டிருக்கக்கூடிய முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டீர்கள் என்றால், ஜுலை 2021 முதல் 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டுள்ளன. 2,95,339 கோடி ரூபாய் அளவில் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை முழுமையாக செயல்படுத்தும்போது, 4,12,565 நபர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும். அந்த அடிப்படையில்தான், இந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.
கேள்வி: சிங்கப்பூர், ஜப்பானை தொடர்ந்து வேறு எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டிருக்கிறீர்கள்?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதில்: அது பின்னர் தான் முடிவு செய்யப்படும்.
கேள்வி: முதலீடுகள் எவ்வளவு ஈர்க்கப்படவுள்ளது?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதில்: கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை நாங்கள் சந்திக்க இருக்கிறோம். அங்கு சென்ற பிறகுதான் முடிவு செய்யப்படும்.
கேள்வி: இந்த பயணம் வெற்றிகரமாக முடியுமா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பதில்: நிச்சயம் வெற்றிகரமாக முடியும். அதற்கு உங்கள் வாழ்த்துகள் தேவை. வாழ்த்துகளை சொல்லி அனுப்புங்கள். நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
முதலமைச்சர் ஸ்டாலினுடன் தொழில்துறை செயலாளர், செய்தித்துறை இயக்குநர், முதலமைச்சரின் முதன்மை செயலாளர்களில் அனுஜார்ஜ் மற்றும் உமாநாத் ஆகிய இருவரும் வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அவர்களையும் மற்றும் அந்நாட்டின் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக் (Temasek), செம்கார்ப் (Sembcorp) மற்றும் கேப்பிட்டாலாண்டு இன்வஸ்மன்ட் (CaptiaLand Investment) அதிபர்கள் / முதன்மைச் செயல் அலுவலர்களை முதல்வர் இன்று சந்திக்க உள்ளார்.