இரட்டை இயந்திரம் பிரச்சனைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது: கெஜ்ரிவால்

இரட்டை இயந்திரம் (பாஜக ஆட்சி) பிரச்சனைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறினார்.

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான அதிகார போட்டியில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மத்திய அரசுக்கு சறுக்கலாக அமைந்தது. அதாவது, உயர் அதிகாரிகள் டிரான்ஸ்பர் மற்றும் பதவி நியமனம் போன்றவற்றை செய்ய முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இந்த தீர்ப்பை மீறும் செய்யும் வகையில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிகிறது. இதையடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற முடிவு செய்துள்ளார். பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய அளவில் எம்.பி.க்கள் இல்லாத நிலையில், மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் மம்தாவின் உதவியை நாடுகிறார் கெஜ்ரிவால். இதன் முதற்கட்டமாக இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சத்தா, டெல்லி அமைச்சர் அதிஷி சிங் ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பின்போது நடப்பு அரசியல் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது:-

பாஜக ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறது, சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை உடைக்க முயற்சி செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கங்களுக்கு தொந்தரவு கொடுப்பதற்காக ஆளுநர்களை பயன்படுத்துகிறது. இப்போது, இரட்டை இயந்திரம் (பாஜக ஆட்சி) பிரச்சனைக்குரிய இயந்திரமாக மாறிவிட்டது. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

இதேபோல் சிவசேனா தலைவர் (உத்தவ் அணி) உத்தவ் தாக்கரேவை நாளையும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நாளை மறுதினமும் கெஜ்ரிவால் சந்திக்க உள்ளார். அப்போது, மாநிலங்களவையில் மத்திய அரசின் நிர்வாக உத்தரவை முடக்கும் திட்டம் தொடர்பாக விவாதிக்க உள்ளார்.