மணீஷ் சிசோடியாவை இழுத்துச் சென்ற காவல்துறையினர்: அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!

மணீஷ் சிசோடியாவை காவல்துறையினர் இழுத்துச் சென்ற விடியோவை பதிவிட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசின் கலால் ஊழல் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலால் ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத் துறை கடந்த மாா்ச் 9 -ஆம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி இன்று டெல்லி நீதிமன்றத்துக்கு மணீஷ் சிசோடியா காவல்துறையினரால் அழைத்து வரப்பட்டார். அப்போது, சிலர் அவரை தங்கள் மொபைலில் புகைப்படம் எடுக்க முயன்றனர். சிசோடியாவும் பேச முயன்றார். அப்போது போலீசார் மணீஷ் சிசோடியாவை வேகமாக இழுத்துச் சென்றனர்.

இந்த விடியோவை பதிவிட்டு தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மணீஷ் ஜியிடம் இப்படி தவறாக நடந்துகொள்ள காவல்துறைக்கு உரிமை இருக்கிறதா? இதை செய்யுமாறு மேலிடத்திலிருந்து கேட்கப்பட்டதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்துள்ள டெல்லி காவல்துறை, ‘பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் அவரை அழைத்துச் சென்றது சரியானது. நீதிமன்றக் காவலில் இருக்கும் குற்றவாளிகள் ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிடுவது சட்டத்துக்கு எதிரானது’ என்று கூறியுள்ளது.