டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும், கள் இறக்க அனுமதி வழங்க கோரியும், சென்னையில் வரும் 25ம் தேதி ஒப்பாரி போராட்டம் நடைபெறும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.
கோவை மாவட்டம், அன்னுாரில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மதுபான விலை அதிகரிப்பால் பலரும் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர். ஒரே வாரத்தில், 26 உயிர்கள் கள்ளச்சாராயத்தால் பலியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் அரசு தோல்வி அடைந்துள்ளது. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். பூரண மது விலக்கு வரும் வரை தென்னங்கள் மற்றும் பனங்கள்ளை அரசே, விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி, வரும் 25-ம் தேதி சென்னையில் மகளிர் அணி சார்பில் ஒப்பாரிப் போராட்டம் நடைபெறும்.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ஒரு முறை தேருக்கு தீ வைக்கப்பட்டது. அது மனநோயாளியின் செயல் என, அரசு மழுப்பிவிட்டது. இரண்டாவது முறை கருவறையிலேயே ஒருவர் தீ வைத்து இறந்தார். தற்போது மூன்றாவது முறையாக கோவிலில் சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணை தேவை.
அன்னூரில் உள்ள பல நுாறு ஆண்டுகள் பழமையான பெரிய அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நீதிமன்றத்திற்கு எடுக்க, அரசு திட்டமிட்டுள்ளது. இது பக்தர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஜூன் 5-ம் தேதி திருவண்ணாமலையில் 1,008 சாதுக்கள், 1,008 சுமங்கலிகள் பங்கேற்கும் கூட்டு பிரார்த்தனை நடைபெற உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற பிரார்த்தனையோடு கிரிவலம் நடக்கிறது. 1,008 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. ஒரு கோடி விதைப்பந்து வினியோகம் துவக்கி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.