அரசு ஊழியர்களைக் கடமை செய்ய விடாமல் தடுத்த உயிருக்கு அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்காது. எனவே, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தொடர்புடைய வீடுகளில் இன்று காலை முதல் ரெய்டு நடந்து வருகிறது. கரூர், சென்னை, கோவை, ஹைதராபாத் என பல இடங்களில் போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் கரூர் ராமேஸ்வரப்பட்டி வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது ஐடி அதிகாரிகள் வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாகச் சோதனைக்கு ஒரு மணி நேரம் முன்பு பாதுகாப்பு கேட்கப்படும் என்று கூறிய போலீசார், ஆனால், இன்று அப்படி யாரும் பாதுகாப்பு கோரவில்லை என்றும் சோதனை குறித்த அறிந்தவுடன் இப்போது 9 இடங்களுக்கு 150 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த ரெய்டு குறித்தும் அதைத் தொடர்ந்து நடந்த பரபர சம்பவம் குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்ட எஸ்பி மீதும் தவறு இருக்கிறது.. ஐடி ரெய்டிற்கு போலீசார் உரியப் பாதுகாப்பு தரத் தவறியுள்ளனர்.. போலீசார் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என்று சொல்வது தவறு.. தமிழ்நாட்டிற்கே ரெய்டு நடக்கிறது என்பது தெரிகிறது. இவருக்குத் தெரியவில்லை என்று சொல்வது தவறு. அவர் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். எனவே, போலீசாருக்கு உரியப் பாதுகாப்பு வழங்கத் தவறிய அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், அரசு ஊழியர்களைக் கடமை செய்ய விடாமல் தடுத்த உயிருக்கு அச்சுறுதலை ஏற்படுத்தியுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தூண்டுதல் இல்லாமல் இது நடந்திருக்காது. எனவே, செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டில் இருக்கும் போது இந்த ரெய்டு நடந்துள்ளது. தேன் கூட்டில் கையை வைத்துள்ளனர். அலி பாபாவும் 40 திருடர்களைப் படத்தைப் பார்த்து இருப்பீர்கள். அதுபோல தான் இவர்கள். அலிபாபா வெளிநாட்டிற்குப் போய் உள்ளனர். மற்ற 35 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழல் திமிங்கிலமாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.