கர்நாடகாவில் 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்!

கர்நாடகாவில் இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். 8 அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்ற நிலையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, 24 பேர் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சர் யார் என்பதை தேர்வு செய்யும் பணி கடும் இழுபறியில் நீடித்த நிலையில், ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சித்தரமையாவை காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்தது. இதையடுத்து கடந்த மே 20ஆம் தேதி, சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவியேற்றது. முதலமைச்சராக சித்தராமைய்யாவுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றார். மேலும், பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகிய 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் 24 பேர், இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். பெங்களூரில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில், இன்று காலை 11:45 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைப்பார். தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், எச்.கே பாட்டீல், கிருஷ்ணபைரே கவுடா, செலுவராயசாமி கே வெங்கடேஷ், எச்சி மகாதேவப்பா, ஈஷ்வர் கண்ட்ரே, கியாத்தசந்திரா என் ராஜண்ணா, எஸ்எஸ் மல்லிகார்ஜூன், உள்ளிட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சரணபசப்பா தர்சனாபூர், சிவானந்தா பாட்டீல், திம்மாப்பூர் ராமப்பா பாலப்பா, தங்கடகி சிவராஜ் சங்கப்பா, சரணபிரகஷ் ருத்ரப்பா பாட்டீல், மான்கால் வைத்யா, லட்சுமி ஹெப்பால்கள், ரகீம் கான், டி சுதாகர், சந்தேஷ் லாட், போஸ்ராஜூ, பிஎஸ் சுரேஷ், மது எம்சி சுதாகர், நாகேந்திரா, மது பங்காரப்பா உள்ளிட்டோரும் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.