சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் 2-வது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை!

வருமான வரி சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் திமுகவினர் முற்றுகையிட்டதால் நேற்று பாதியிலேயே வருமான வரித்துறை சோதனை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் இன்று சிஆர்.பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக், மற்றும் அவரது நண்பர் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. முதலில் செந்தில் பாலாஜி வீட்டிலும் இந்த சோதனை நடப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும் இந்த தகவலை மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “எனது சகோதரர், உறவினர்கள், நண்பர்களின் வீடு மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்களின் இடங்கள் என 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனது வீட்டில் சோதனை எதுவும் நடக்கவில்லை. சோதனை நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்றார்.

இன்று காலை 2-வது நாளாக பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. விடிய விடிய நடைபெற்ற ஐடி சோதனை இன்றும் தொடர்ந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனைக்கு சென்ற அதிகாரிகளை முற்றுகையிட்டு சில இடங்களில் திமுகவினர் வாக்கு வாதம் செய்ததோடு காரையும் தாக்கினர். இதனால், நேற்று சில இடங்களில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போலீசாருக்கு உரிய தகவல் தெரிவிக்காமலேயே ஐடி அதிகாரிகள் சோதனை நடத்த சென்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சிஆர்.பி.எப் அதிகாரிகள் பாதுகாப்புடன் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் கரூரில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் இந்த சோதனைக்கு பாதுகாப்பாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.