டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவுடன் சந்திப்பு!

டெல்லி யூனியன் பிரதேச அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய பாஜக அரசின் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்களை அணிதிரட்டி வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த வரிசையில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவை சந்தித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

மத்தியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு வட இந்தியாவில் சவால்விடும் வகையில் வளர்ந்து நிற்கிறது ஆம் ஆத்மி கட்சி. டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி 2-வது முறையாக அதிகாரத்தில் இருந்து வருகிறது. அத்துடன் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு இது கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் டெல்லி யூனியன் பிரதேச அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் தொடர்பான அதிகாரம் யாருக்கு என்பதில் கெஜ்ரிவால் தலைமையிலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் மத்திய பாஜக அரசுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இது தொடர்பான வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரிகளை நியமனம் செய்வது மாற்றம் செய்வது போன்ற அதிகாரம் இருக்கிறது என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் மத்திய பாஜக அரசு, அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் தொடர்பான அதிகாரம் தமக்கே உண்டு என ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து அமல்படுத்திவிட்டது. இது அவசர சட்டம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் புதிய மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். லோக்சபாவில் பெரும்பான்மை இருப்பதால் மத்திய அரசின் மசோதா எளிதாக நிறைவேறும். ஆனால் ராஜ்யசபாவில் பெரும்பான்மைக்கு போராடுகிற நிலைமையில் மத்திய பாஜக அரசு இருக்கிறது. சில எதிர்க்கட்சிகளின் ஆதரவும் இம்மசோதாவை நிறைவேற்ற பாஜகவுக்கு தேவை.

அதேநேரத்தில் ராஜ்யசபாவில் இம்மசோதாவை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாக இருக்கிறார். இதற்காக பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்தித்து இம்மசோதாவை எதிர்க்க வலியுறுத்தி வருகிறார் கெஜ்ரிவால். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரை சந்தித்த கெஜ்ரிவால் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனாவின் மற்றொரு பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரை சந்தித்தார். இச்சந்திப்புகளைத் தொடர்ந்து இன்று தெலுங்கானாவில் அம்மாநில முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவையும் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார்.