அரிசிக் கொம்பன் யானை தாக்கியத்தில் பால்ராஜ் என்பவர் பலி!

அரிசிக் கொம்பன் யானை தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பால்ராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் மேகமலை கோட்டத்துக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அரிசிக்கொம்பன் என்னும் ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மே 27 ஆம் தேதி காலை 8 மணிக்கு அரிசிக் கொம்பன் யானை கம்பம் நகருக்குள் புகுந்தது. அதை தொடர்ந்து கம்பம் பைபாஸ் சாலைக்கு அருகே அமைந்துள்ள வாழை தோப்புக்குள் அரிசி கொம்பன் யானை இரவுவரை இருந்தது. இந்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி அமைச்சர் ஐ பெரியசாமி இரவு அரிசி கொம்பன் யானை இருந்த பகுதியை ஆய்வு செய்தார். வனத்துறை அதிகாரிகளிடம் யானை தற்போது இருக்கும் இருப்பிடம் மற்றும் அதனை பிடிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தார்.

அதே நாளில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் யானையின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அதனை பிடிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை இரவு 11.15 மணியளவில் கேட்டறிந்தார். பின்னர், அரிசிக்கொம்பன் காட்டு யானை 27 ஆம் தேதி இரவு நாரயாணத்தேவன்பட்டி வருவாய் கிராமம் வழியாக கூத்தனாட்சி காப்பு வனப்பகுதிக்கு 28 ஆம் தேதி சென்றது. அரிசிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 5 பேர் அடங்கிய கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் 3 கும்கி யானைகள் கம்பம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழு வனத்துறை அலுவலர்கள் தலைமையில் யானையின் நகர்வை கண்காணித்து வருகிறது.

24 மணி நேரமும் வனத்துறை மற்றும் யானை கண்காணிப்பாளர்கள் அடங்கிய 23 பேர் கொண்ட குழு தொடர்ந்து வனப்பகுதிக்குள் இருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 28 ஆம் தேதி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் யானை தற்போது சுற்றித்திரியும் கூத்தனாட்சி காப்புவனப்பகுதிக்கு சென்று வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறையினரிடம் ஆலோசித்தனர். இந்த நிலையில் அரிசி கொம்பன் யானை கம்பம் நகர குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வனத்துறையினரின் வாகனம், ஆட்டோ வாகனத்தையும் தாக்கியது. அத்துடன் யானையை பார்ப்பதற்காக அவ்வழியாக சென்ற பால்ராஜ் என்பவரை அரிசி கொம்பன் தாக்கியது. இதில் காயமடைந்து உயர்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பால்ராஜ் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்.